ஆரணியில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உருவ சிலைகள் வருகிற 17-ந் தேதி முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்
ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ சிலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார்.
ஆரணி,
ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பைபாஸ் சாலை சந்திப்பில் அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். உருவ சிலையையும், அ.தி.மு.க. பொது செயலாளரும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆகியோருக்கு வெண்கல உருவ சிலையை திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நிறுவி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ வெண்கல சிலைகள் திறப்பு விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சி கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 3 மணியளவில் நடக்கிறது.
இதில் தமிழக முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா உருவ சிலைகளை திறந்து வைக்கின்றனர். மேலும் அதன் அருகில் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே முதல்முறையாக 100 அடி உயரம் கொண்ட கொடிகம்பம் அமைக்கப்பட்டு, அதில் 20 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட கட்சிக்கொடியை ஏற்றிவைத்து கல்வெட்டினையும் திறந்து வைக்கின்றனர்.
பின்னர் எதிரே அமைந்துள்ள ஜெயலலிதா திடலில் ஏழை எளியவர்களுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு தையல் எந்திரம், சலவைப்பெட்டி, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள், வேட்டி-சேலை உள்ளிட்ட 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகின்றனர்.
விழாவில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள், அனைத்துப் பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 நகராட்சிகள், 18 ஒன்றியங்கள், பேரூராட்சிகள், கிளை, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட எல்லையில் இருந்து மேடை வரை 16 இடங்களில் பச்சை பந்தல் அமைத்து வரவேற்பு வளைவுகள், மேடை முகப்பில் 300 அடி அகலமும் 40 அடி உயரமும் பிரமாண்டமான பச்சை மரங்கள், காய்கறிகளால் நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் கேரள செண்டை மேளம் நாதஸ்வரங்களுடன், மகளிர்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளும், வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகளை வைத்து வரவேற்பு ஏற்பாடுகளையும் மாவட்ட செயலாளர்கள் செய்து வருகின்றனர்.