ஆத்மநாயகி அம்பாள்- ருத்ர கோடீஸ்வரர் திருக்கல்யாணம்
சிங்கம்புணரி அருகே ஆத்மநாயகி அம்பாள் சமேத ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்களம் என்றழைக்கப்படும் எஸ்.வி.மங்களத்தில் உள்ள ஆத்மநாயகி அம்பாள் சமேத ருத்ர கோடீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கயிலை பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் திருக்கோவில்களில் ஒன்றான எஸ்.வி மங்களத்தில் உள்ள ஆத்மநாயகி அம்பாள் சமேத ருத்ர கோடீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி மண்டபக்காரர்கள் சார்பில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.
இதையடுத்து நேற்று சாமி அம்பாளின் திருக்கல்யாண நிகழ்ச்சி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் காலை 11.40 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
திருவிழாவில் சமணர்களுக்கு சாப விமோசனம் வழங்கிய விழாவான கழுவன் திருவிழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 18-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு மற்றும் பூக்குழிதிருவிழா நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.