அறிவியல் வளர்ச்சிக்கு கணிதம் அடிப்படை கேரள பல்கலைக்கழக பேராசிரியர் பேச்சு
அறிவியல் வளர்ச்சி மற்றும் தொலைத் தொடர்பிற்கு கணிதம் அடிப்படையாக திகழ்ந்து வருகிறது என்று கேரள பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.சுரேஷ்சிங் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்றைய நவீன கால கணிதத்தின் பயன்பாடு மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
விழாவில் கேரள பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.சுரேஷ்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:- பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காக மொழியை பயன்படுத்தினான். மொழி உருவாக்கத்திற்கு கணிதம் தான் அடிப்படையாக இருந்துள்ளது.
இதனை தமிழ் இலக்கண நூல்களில் கூறப்பட்ட எழுத்துகளின் உச்சரிப்பு முறை, கால அளவு, மாத்திரை உள்ளிட்டவற்றால் அறிய முடியும். தமிழ் மொழி மட்டுமின்றி வேற்று மொழிகளுக்கும் கணிதம் முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. இவை தவிர அன்றாட வாழ்வியல் முறைக்கும், நவீன கால அறிவியல் வளர்ச்சி மற்றும் தொலைத் தொடர்புக்கும் கணிதம் தான் அடிப்படையாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் அன்பழகன், சிவகாசி அய்யா நாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி உதவி பேராசிரியர் ரேணுகாதேவி மற்றும் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.