தாராபுரத்தில் மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு முகமூடி ஆசாமிகளின் கைவரிசையால் வியாபாரிகள் அச்சம்
தாராபுரத்தில் மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருடப்பட்டது. முகமூடி ஆசாமிகளின் கைவரிசையால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
தாராபுரம்,
தாராபுரம், நேருநகரைச் சேர்ந்தவர் சிவநேசன் (வயது 35). இவர் அண்ணாநகர் விநாயகர் கோவில் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம் போல் வந்து கடையை திறந்தார்.
அப்போது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை பிரித்து, உள்ளே இறங்கி, கடையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிவநேசன் கடையில் திருட்டு நடந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளில் முகமூடி அணிந்த மர்ம ஆசாமி ஒருவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருவதால் கடைகளின் மேற்கூரைகளை உடைத்து திருடுவது ஒரே நபராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தாராபுரத்தில் கடந்த சில காலமாக இரவு நேரத்தில் பூட்டியிருக்கும் கடையின் மேற்கூரையை உடைத்து, மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து, கடையில் உள்ள பணம் மற்றும் பொருட்களை திருடிச்செல்வது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் புறவழிச்சாலையில் அடுத்தடுத்து இருந்த 7 கடைகளை மர்ம ஆசாமிகள் ஒரே இரவில் மேற்கூரையை உடைத்து, கடையில் இருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் வியாபாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த சம்பவம் தொடர்பாக அங்குவைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், மர்ம நபர் ஒருவன் முகமூடி அணிந்தவாறு, கட்டிடத்தின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி கைவரிசை காட்டியது தெரியவந்தது. ஆனால் இதுவரை அவரை பிடிக்கவில்லை.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கடைகளின் மேற்கூரையை உடைத்து, மர்ம ஆசாமிகள் கடைக்குள் வைத்திருக்கும் பணத்தையும், பொருட்களையும் திருடிச் செல்கிறார்கள். இதனால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தால், அவர்கள் வந்து விசாரித்துவிட்டு, பணம் நிறைய திருடுபோய் இருந்தால், அதை வெளியில் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள். மீறி சொல்வதாக இருந்தால் அந்த பணத்திற்கு கணக்கு காட்டவேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.
அதனால் எதற்கு வம்பு என்று வியாபாரிகள் பணம் திருடுபோகவில்லை என்று பொய்சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவரை பல கடைகளில் இதேபோன்ற திருட்டு சம்பவம் நடைபெற்று விட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் புகார் கொடுத்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்வதில்லை. திருடர்களையும் பிடிப்பதில்லை. இது குற்றவாளிக்கு வாய்ப்பாக இருப்பதால், தொடர்ந்து திருட்டு நடைபெறுகிறது. இதனால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.. விரைவில் முகமூடி திருடர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையேல் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறினார்கள்.