வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை

வேளர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது. இதுதொடர்பாக பெண் அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-14 23:15 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே வேர்கிளம்பியில் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக பல்வேறு சான்றிதழ்கள் வாங்குவதற்காக வந்து செல்வார்கள்.

இதனால், எப்போதும் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்படும். இந்த பேரூராட்சி அலுவலகத்தில் நாகர்கோவிலை சேர்ந்த மாலதி என்பவர் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தை பற்றி கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்தநிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் போலீசார், கல்குளம் தாசில்தார் ராஜாசிங் ஆகியோர் நேற்று மாலை வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, செயல் அலுவலர் மாலதியிடம் கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருப்பதை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குலசேகரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்தகாரர் ஒருவரிடம் அரசின் ஒப்பந்த பணிகள் வழங்குவதற்காக லஞ்சமாக ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தணிக்கை செய்தனர். இதுகுறித்து செயல் அலுவலர் மாலதியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்