தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் மாநில கட்சிகள் கூட்டணி சேரக்கூடாது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தீர்மானம்
தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் மாநில கட்சிகள் கூட்டணி சேரக்கூடாது என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு,
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் பி.கே.தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சேரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் மாநில கட்சிகள் கூட்டணி சேரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மாநில தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறியதாவது:-
பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றன. காவிரி பிரச்சினையில், இரு கட்சிகளும் தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டதால் இதுவரை 381 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இத்தகைய நிலையிலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி கர்நாடக அரசை நரேந்திர மோடியும், ராகுல்காந்தியும் வலியுறுத்தவில்லை.
இதேபோல் டெல்டா விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை 2 கட்சிகளும் கொண்டு வந்தன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க பா.ஜ.க. மறுத்துவிட்டது. விவசாய விளைபொருட்களுக்கு 50 சதவீதம் லாபத்துடன் கூடிய விலை கிடைக்க செய்ய வேண்டும் என்கிற எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டியின் அறிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திரமோடி அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திரமோடியும், ராகுல்காந்தியும் நேரில் வந்து பார்வையிடவில்லை. எனவே தமிழக விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க.வையும், காங்கிரஸ் கட்சியையும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அதனால் அந்த 2 கட்சிகளுடன் தமிழகத்தில் உள்ள எந்தவொரு கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், கூட்டணி வைக்கும் கட்சிகளை புறக்கணிப்போம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் விரைவில் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில செயலாளர் எம்.சந்திரசேகர் நன்றி கூறினார்.