நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? வைகோ பதில்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்தார்.
நெல்லை,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்தார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பணிக்குழு நியமனம்
தமிழகத்தில் 64 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் ம.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டு வருகிறது. 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டன. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக ம.தி.மு.க. தான் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்கிறது.
நாடாளுமன்றத்துக்கு முதல் கட்டமாக நடைபெறும் தேர்தலிலேயே தமிழகத்துக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தேர்தலுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இடைத்தேர்தலை தள்ளி வைக்க அ.தி.மு.க., பா.ஜனதா முயற்சி செய்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார். இரண்டு தேர்தலையும் நடத்தவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும். கூட்டாட்சி தத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி மதிப்பது இல்லை. அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை கூட்டுவது இல்லை. ஆனால் வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து வந்தாலும், அவர் கூட்டாட்சி தத்துவத்தை மதித்தார். அவர் அடிக்கடி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினார். அனைத்து தலைவர்களின் கருத்துகளை கேட்டார்.
ஆனால் மோடி அவ்வாறு செயல்படவில்லை. மேகதாது அணை கட்ட மறைமுகமாக ஆதரவு அளித்தார். ஹைட்டோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டங்கள் மூலம் தஞ்சை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சி செய்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கவில்லை.
கருப்பு கொடி
தமிழக மக்கள் நலனுக்கு எதிராக மோடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதனால் தான் அவர் தமிழகத்துக்கு வரும்போது, கருப்பு கொடி காட்டி வருகிறோம். அரசு விழாக்களில் கலந்து கொள்ள வரும் போதெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம். மோடிக்கு, அ.தி.மு.க. அரசு ஆதரவாக செயல்படுகிறது. இந்த இரண்டு அரசுகளும் தூக்கி எறியப்பட வேண்டும்.நாங்கள் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளோம். கலைஞர் நினைவோடு இருக்கும் போது, அவரிடம் வாக்கு கொடுத்து விட்டேன். அதாவது உங்களுக்கு எப்படி உதவியாக இருந்தேனோ? அதேபோல் மு.க.ஸ்டாலினுக்கும் இருப்பேன் என்று கலைஞரிடம் கூறினேன். அதன்படி செயல்பட்டு வருகிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து வாதாடி வருகிறோம். தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இது மக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வர வாய்ப்பு உள்ளது.
பிரியங்கா அரசியலுக்கு வந்தது வட மாநிலங்களில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. பா.ஜனதா கட்சியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு அதிகபட்சமாக 125 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்.
போட்டியா?
நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்யும். கட்சி அறிவித்தால் நான் போட்டியிடுவேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.
தொடர்ந்து அவர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். வைகோவிடம், மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் நிஜாம் (மாநகர் மாவட்டம்), ராஜேந்திரன் (புறநகர் மாவட்டம்), வெற்றிவேல் (குமரி), செல்வம் (தூத்துக்குடி தெற்கு), ரமேஷ் (தூத்துக்குடி வடக்கு), முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன்திருமலை குமார், ஊடக பிரிவு செயலாளர் மின்னல் முகம்மது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.