வனத்தில் இருந்து தண்ணீரை தேடிவரும் காட்டு யானைகள் தோட்ட தொழிலாளர்கள் பீதி

வனத்தில் இருந்து தண்ணீரை தேடி வரும் காட்டுயானைகளால் தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2019-02-14 23:15 GMT
வால்பாறை,

வால்பாறை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுயானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக அதிகளவில் முகாமிட்டுள்ளன. தற்போது பனியும், குளிரும் வால்பாறை பகுதியில் நின்று விட்டது. பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. எனவே கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் வற்றத் தொடங்கி விட்டது. யானைகள் உணவில்லாமல் கூட இருக்கும். ஆனால் தண்ணீர் இல்லாமல் இருக்காது. எனவே தான் வால்பாறை பகுதியில் தற்போது சுற்றித்திரியும் யானைக் கூட்டங்கள் அனைத்துமே நீர் நிலைகள், வற்றிப்போன ஆறுகள், நீரோடைகளுக்கு அருகில் அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பீதியடைந்து வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தற்போது அனைத்து யானைக் கூட்டத்திலும் புதிதாக ஈன்ற குட்டிகள் உள்ளன. இதனால் குட்டிகள் உள்ள யானைக் கூட்டங்கள் எஸ்டேட் பகுதிகளில் இருக்கும் நீர் நிலைகளுக்கு அருகில் முகாமிட்டு வருகின்றன. ஆனால் அந்த பகுதிகளில் இருக்கும் குறைந்தளவு தண்ணீர் அனைத்து யானைகளுக்கும் போது மானதாக இல்லாததால் யானைகள் கூட்டம் பிரிந்து பல்வேறு கூட்டங்களாக சென்று வருகின்றன.

அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் யானைகள் உள்ளன. வனத்துறையினர் வறட்சியான இந்த காலங்களில் யானைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு வசதியாக ஆங்காங்கே வனப் பகுதிகளுக்குள்ளும் வனப்பகுதிகளின் ஓரங்களிலும் யானைகளின் வழித்தடங்களிலும் தண்ணீர் தொட்டிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த காலங்களை ஒப்பிடும் போது யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு தான் வருகின்றன. இருந்தபோதிலும் உணவு தேடி வருகின்ற யானைகளால் தொல்லை இல்லாமல் இல்லை. ஆகவே வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்தி கண்காணிப்பு பணியை அதிகப்படுத்திட வேண்டும். எஸ்டேட் பகுதி மக்களுக்கு நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் பொருட் களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல எஸ்டேட் பகுதிகளில் உள்ள மளிகைக்கடைகளுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்கு எஸ்டேட் நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.

மேலும் வாழை, பலா மரங்களை பயிரிடுவதை தவிர்க்கவும், எஸ்டேட் பகுதிகளில் வனப்பகுதிகளின் ஓரங்களில் யானைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய தீவன பயிர்களை பயிரிடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்டேட் பகுதிகளில் உள்ள இடைச்சோலைகளை பாதுகாத்து மேலும் இடைச்சோலைகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு யானைகள் வருவது முற்றிலும் குறைந்துவிடும். காட்டு யானைகளை பற்றிய அச்சமும் நீங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்