குன்னூர் ஏல மையத்தின் ஜனவரி மாத வருமானம் ரூ.55¾ கோடி சர்வதேச மேலாண்மை ஆலோசகர் தகவல்

குன்னூர் ஏல மையத்தின் கடந்த ஜனவரி மாத வருமானம் ரூ.55¾ கோடி என்று சர்வதேச மேலாண்மை ஆலோசகர் கூறினார்.

Update: 2019-02-14 22:00 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் நடத்தப்படுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கிறார்கள். இந்த நிலையில் குன்னூர் தேயிலை ஏல மையத்தின் கடந்த ஜனவரி மாத வருமானம் ரூ.55¾ கோடியே 76 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து சர்வதேச மேலாண்மை ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-

இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூளின் சராசரி விலை கிலோவுக்கு 99 ரூபாய் 92 பைசா என கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேயிலைத்தூளின் சராசரி விலை கிலோவுக்கு 88 ரூபாய் 79 பைசாவாக இருந்தது. இதை கணக்கிடும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தேயிலைத்தூளுக்கு சராசரி விலை 11 ரூபாய் 13 பைசா உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் கூடுதல் விலைக்கு அதிக தேயிலைத்தூளை வர்த்தகர்கள் வாங்கியது தான்.

கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 4 ஏலங்கள் நடைபெற்றன. அதில் 56 லட்சத்து 3 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 45 லட்சத்து 18 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

வட மாநிலங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி முதல் தேயிலை உற்பத்தியை நிறுத்த தேயிலை வாரியம் அறிவுறுத்தியது. ஏனெனில் வட இந்தியாவில் குளிர்காலத்தில் தரமான தேயிலை உற்பத்தி செய்யப்படுவது இல்லை.

கடந்த 2 ஆண்டுகளாக அங்கு அதிகளவு சிறு தேயிலை தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, தரம் குறைந்த தேயிலைத்தூள் குளிர் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் சந்தையில் தேயிலைத்தூள் விலை குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு முதல்முறையாக குளிர்காலத்தில் வட இந்தியாவில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூட தேயிலை வாரியம் உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக வடமாநில தேயிலை வர்த்தகர்களின் கவனம் குன்னூர் ஏல மையம் பக்கம் திரும்பியது. இதனால் குன்னூர் ஏல மையத்தில் ஆரோக்கியமான போட்டி நிலவியது.

இதன் காரணமாக தேயிலைத்தூளின் விலையில் உயர்வு ஏற்பட்டு 10 லட்சத்து 85 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் கூடுதலாக விற்பனையானது. அதிகளவு தேயிலைத்தூளை அதிக விலை கொடுத்து வர்த்தகர்கள் வாங்கியதால் குன்னூர் ஏல மையத்தில் கடந்த ஜனவரி மாத மொத்த வருமானமும் உயர்ந்தது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் குன்னூர் தேயிலை ஏல மையத்தின் மொத்த வருமானம் ரூ.55 கோடியே 79 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.40 கோடியே 12 லட்சம் மொத்த வருமானமாக கிடைத்தது. இதனை வைத்து பார்க்கும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.15 கோடியே 67 லட்சம் கூடுதலாக வருமானம் கிடைத்து உள்ளது. இது 39.06 சதவீத வளர்ச்சி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்