மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடலூர் துறைமுகம் 2-வது நாளாக வெறிச்சோடியது
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடலூர் துறைமுகம் 2-வது நாளாக வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைகோரி, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் அதிகாலையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விசை மற்றும் பைபர் படகுகளில் சென்றனர். ஆனால் வழக்கத்தை விட கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால், அவர்கள் பாதியிலேயே கரைக்கு திரும்பினர். ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்த மீனவர்களும் கரைக்கு வந்தனர்.
நேற்றும் கடல் சீற்றமாக இருந்ததால் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகம், தாழங்குடா, தேவனாம்பட்டினம் கடற்கரையோரத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அதிகாலை முதல் மதியம் வரை பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் 2-வது நாளாக வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர் முதுநகர் மீன் அங்காடி, திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட், மஞ்சக்குப்பம் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு நேற்று குறைந்த அளவே மீன்கள் வந்திருந்தன. அதுவும் ஏற்கனவே பிடித்து, ஐஸ்கட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த மீன்கள் மட்டும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்திருந்தது. 550-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன் ரூ.600 முதல் ரூ.700 வரையிலும், 350-க்கு விற்கப்பட்ட கொடுவா மீன் ரூ.400 முதல் ரூ.500 வரையிலும், ரூ.250-க்கு விற்கப்பட்ட ஷீலா மீன் ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், ரூ.350-க்கு விற்கப்பட்ட பாறை மீன் ரூ.450-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட கவளை மீன் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற மீன்களின் விலையும் உயர்ந்திருந்தது.