நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாது டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
சத்தியமங்கலம்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்தார். நேற்று காலை தாளவாடிக்கு செல்லும் வழியில் பண்ணாரி கோவிலுக்கு சென்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அம்மனை தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
பட்ஜெட் கூட்டத்தொடரின்போது 35 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமமாகும்.
ஜெயலலிதா எந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் தற்போது அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க.வால் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் தாளவாடிக்கு புறப்பட்டு சென்றார்.