கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-02-12 23:00 GMT
சேலம்,

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டம் மூலம் குழந்தைகளுக்கு பால் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் செங்கோட்டுவேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் நிருபர்களிடம் கூறியதாவது:- பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி 4½ ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே பசும்பால் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தி ரூ.37 ஆகவும், எருமைபால் லிட்டருக்கு ரூ.16 உயர்த்தி ரூ.45 ஆகவும் அரசு வழங்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 27-ந் தேதி பால் கூட்டுறவு ஒன்றியங்கள் செயல்படும் இடங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் முடிவின்படி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் அல்லது கால்நடைகளுடன் சாலைமறியல் போன்ற போராட்டம் நடத்தப்படும்.

அதைத்தொடர்ந்து கூட்டுறவு ஒன்றியங்களுக்கு பால் நிறுத்தம் செய்யும் போராட்டம் நடத்தப்படும். எனவே விரைவில் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்