ஏப்ரல், மே மாதங்களில் சென்னை–கொல்லம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது முன்பதிவு தொடங்கியது
சென்னையில் இருந்து விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
விருதுநகர்,
தென்னக ரெயில்வே நிர்வாகம் ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதே போன்று மாற்றுப்பாதையில் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து கொல்லத்துக்கு 1,3,8,10,15,19,22,24,29 ஆகிய தேதிகளிலும், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு 2,4,9, 11,16,18,23,25,30 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கொல்லத்திற்கு மறுநாள் 9.20–க்கு சென்றடையும். விருதுநகருக்கு அதிகாலை 2.28–க்கும், திருத்தங்கலுக்கு 2.48–க்கும், சிவகாசிக்கு 2.55–க்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 3.12–க்கும், ராஜபாளையத்துக்கு 3.28–க்கும் வரும். இதே போன்று கொல்லத்தில் இருந்து 11½ மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதிகாலை 3½ மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. இந்த ரெயில் ராஜபாளையத்துக்கு மாலை 4.20–க்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாலை 4.24–க்கும், சிவகாசிக்கு 4.42–க்கும்,திருத்தங்கல்லுக்கு 4.48–க்கும், விருதுநகருக்கு 5.23–க்கும் வரும். மே மாதம் 1,8,13,15,20,22,27,29 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து கொல்லத்துக்கும், 2,7,9,14,16,21,23,28,30 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி விட்டது. இந்த ரெயில்களுக்கு சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் ரெயில்வேத்துறை அவர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கு சிறப்பு கட்டணம் வசூலிக்காமல் வழக்கமான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். சிறப்பு கட்டணம் வசூல் என்பது ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.