மைசூருவில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை

மைசூருவில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-10 21:45 GMT
மைசூரு,

மைசூரு தாலுகா பிளிகெரே அருகே செல்லஹாளு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது 35). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மனைவி சாந்தா (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சாந்தா-ராஜூ தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதேபோல, ஆனந்த்ராஜூக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆனந்த்ராஜூம், சாந்தாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர்.

பின்னர் கிராமத்தில் பஞ்சாயத்து நடத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் பஞ்சாயத்தார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அவர்கள் மறைமுகமாக தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இதுபற்றி தெரிந்ததும் 2 பேரின் குடும்பத்தினரும் பிளிகெரே போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசில் புகார் கொடுத்ததால், விசாரணைக்கு பயந்த அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பிளிகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரம் பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டதால், அவர்கள் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்