2–வது நாளாக இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரெயிலில் 7 பேர் மட்டுமே பயணம்
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு 2–வது நாளாக இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரெயிலில் 7 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
நாகர்கோவில்,
ரெயில்வே துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மிகவும் பழமை வாய்ந்த நீராவி என்ஜினுடன் கூடிய ‘ஹெரிடேஜ் ரெயில்’ என்ற பாரம்பரிய ரெயில் பயணத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் 1855–ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் 1919 வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், பாரம்பரியம் மிக்கதுமான நீராவி என்ஜின் ரெயில் பயன்படுத்தப்படுவதுதான் இதன் சிறப்பம்சமாகும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் நடைபெற்ற இந்த பாரம்பரிய ரெயில் பயணம் கடந்த 7–ந் தேதி திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட நாகர்கோவில்–கன்னியாகுமரி இடையே நடைபெற்றது. இந்த ரெயிலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு வெளிநாட்டினராக இருந்தால் ரூ.1,500–ம், உள்நாட்டினராக இருந்தால் ரூ.750–ம், சிறுவர்களுக்கு ரூ.500–ம் கட்டணமாக ரெயில்வே அதிகாரிகள் நிர்ணயம் செய்திருந்தனர்.
முதல் நாள் ரெயில் பயணத்தின்போது வெளிநாட்டை சேர்ந்த 20 பேர் மட்டுமே பயணம் செய்தனர். 2–வது நாளாக நேற்று முன்தினம் இயக்கப்பட இருந்தது. முன்பதிவு செய்திருந்த ஒன்றிரண்டு பேரைத்தவிர யாரும் இந்த ரெயிலில் பயணம் செய்ய முன்வராததால் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த ரெயில் சேவை பற்றி திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததும், விளம்பரப்படுத்தாததும், அதிக கட்டணம் நிர்ணயம் செய்திருந்ததும்தான் இதில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததற்கு காரணம் என்று பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்து பயணம் செய்ய வந்திருந்தார்கள். இருந்தாலும் அவர்களுக்காக இந்த ரெயில் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. 11.30 மணி அளவில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.
164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி என்ஜின் ரெயில் நேற்று குமரி மாவட்டத்தில் தனது பயணத்தை நிறைவு செய்தது. இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை நீராவி என்ஜின் ரெயில் நாகர்கோவிலில் இருந்து மாற்று ரெயில் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.