போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க பெங்களூரு நகரில் கூடுதலாக 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் தகவல்
பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க கூடுதலாக 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகர போக்குவரத்து மேலாண்மை மையத்தில் மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர்கூறியதாவது:-
பெங்களூரு மாநகர் வேகமாக வளர்ந்து வருகிறது. பொதுமக்களின் எண்ணிக்கையும், வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. பெங்களூரு நகரில் 1.20 கோடி பேர் வசித்து வருகிறார்கள். 78.84 லட்சம் வாகனங்கள் உள்ளன. 13 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் உள்ளன. இதுபோன்ற காரணங்களினால் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாக உள்ளது. சாலைகளில் வாகனங்களை நிறுத்துவது, தனியார் நிறுவனங்களில் வாகனம் நிறுத்த வசதி இல்லாதது போன்ற காரணங்கள் தான் போக்குவரத்து நெரிசலுக்கு வழி வகுக்கின்றன. இதனால் வாகன நிறுத்தும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது பெங்களூரு மாநகராட்சி உள்பட பெங்களூரு நகர வளர்ச்சி குழுமங்கள் அனைத்தும் ஒருசேர போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குழுமங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்தை முறைப்படுத்தாவிட்டால் அது விபத்துகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துவிடும் இதனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை போன்று பெங்களூரு நகரிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். தற்போது போக்குவரத்து பிரிவு சார்பில் 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விரைவில் போக்குவரத்தை கண்காணிக்க கூடுதலாக 6 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன்மூலம் குற்ற சம்பவங்களும், போக்குவரத்து விதிமீறல்களும் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் விபத்து அதிகமாக ஏற்படும் இடங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளன. முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிற்கும் எண்ணிக்கையை பொறுத்து செயல்படும் நவீன தானியங்கி சிக்னல்கள் நடை முறைக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
முக்கிய சாலைகளில் போக்குவரத்து விதிமீறினால் விதிக்கப்படும் அபராதம் பற்றிய பதாகைகள் வைக்கப்படும். இதை பார்த்ததும் சிலர் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்க வாய்ப்பு உருவாகும். மேலும் வாகன ஓட்டிகள் மதுபானம் அருந்தியுள்ளனரா? என்பதை பரிசோதிக்க பயன்படுத்தும் ‘ஸ்ட்ரா’ ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. இது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.