டவேடு அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 மாணவர்கள் பலி தானிப்பாடியில் நடந்த விபத்தில் 2 பேர் சாவு

படவேடு அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். தானிப்பாடியில் நடந்த விபத்தில் 2 பேர் இறந்தனர்.

Update: 2019-02-10 22:15 GMT
கண்ணமங்கலம், 

ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர்கள் நந்தகுமார் (வயது 18), ஜெயச்சந்திரன் (18) மற்றும் வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் தயாநிதி (19). இவர்கள் 3 பேரும் ஆரணியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தனர்.

நண்பர்களான 3 பேரும் நேற்று முன்தினம் இரவு படவேடு அருகே கேசவபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நண்பரின் உறவினர் திருமணத்திற்கு சென்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 11.30 மணியளவில் படவேட்டில் இருந்து ஆரணிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை நந்தகுமார் ஓட்டினார்.

காட்ரோடு பஸ் நிறுத்தம் அருகே வரும்போது திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த புளியமரத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயச்சந்திரனும், நந்தகுமாரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தயாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே உள்ள பி.குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (44). அதே கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (54). இவர்கள் இருவரும் பெருங்குளத்தூர் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரும்போது கோவிந்தராஜபுரம் என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாசிலாமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாசிலாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து பெங்களூருவை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் கிரண் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்