ஆம்பூர் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியது 25 பேர் படுகாயம்
ஆம்பூர் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூர்,
சென்னையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. ஆம்பூர் அருகே வெங்கிளி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென டீசல் காலியாகிவிட்டதால் சாலையிலேயே லாரி நின்றுவிட்டது.
அப்போது சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் கமலநாதன் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.
வெங்கிளி பகுதியில் வந்தபோது திடீரென சாலையில் இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதி முன்னோக்கி சென்றது. இதில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்து எலும்புகூடு போல் காட்சி அளித்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கோவிந்தராஜ் (36), லட்சுமி (23), காவியா (13) உள்பட 25–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசாரும், 108 ஆம்புலன்சும் விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கோவிந்தராஜ், லட்சுமி, காவியா ஆகிய 3 பேரும் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.