ரத்தினகிரி அருகே கார்– மினிவேன் மோதலில் 2 பேர் பலி போலீசார் விசாரணை

ரத்தினகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்– மினிவேன் மோதலில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-10 22:00 GMT

ஆற்காடு,

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 8 மணி அளவில் ரத்தினகிரி அருகே அரப்பாக்கம் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றது. அப்போது அந்த சாலையில் வந்த மினிவேன் மீது கார் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மினிவேனில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச் சென்று மினிவேனில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு வாகனங்களும் சாலையில் கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரத்தினகிரி மற்றும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், கார் சென்டர் மீடியனில் ஏறியபோது அங்கு வளர்ந்திருந்த அரளி செடி மீது மோதியது. இதனால் அந்த செடி காரில் சிக்கியது. செடியை இழுத்தவாறே கார் சென்று மினிவேன் மீது மோதியது. மினிவேனில் இருந்த ஒரு ஓட்டுனர் உரிமத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் பெங்களூருவை சேர்ந்த அருணா என்ற பெயர் இருந்தது. மீட்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் செல்லும் வழியில் இறந்து விட்டார். இந்த விபத்தில் இறந்த இருவரும் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்