புதுச்சேரி அரசு வரி வருவாயை திரட்டவில்லை மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

புதுவை அரசு வரிவருவாயை திரட்டவில்லை என்று மக்கள் நீதி மய்யம் குற்றஞ்சாட்டி உள்ளது.

Update: 2019-02-09 23:15 GMT

புதுச்சேரி,

மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி அரசால் அமல்படுத்த கூடிய ஊதியக்கமி‌ஷன் பரிந்துரை, பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு வழங்கக்கூடிய மானியம் உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை வைக்கும்போது, புதுச்சேரியில் நிதி நெருக்கடி உள்ளதாக கூறி வருகிறார். மேலும் அதற்கு கவர்னர் கிரண்பெடிதான் காரணம் என்பது போலவும் பேசி, குற்றம் சுமத்தி வருகின்றார்.

2018–19 ஆண்டுக்கான நிதி நிலையாக ரூ.7,530 கோடிக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றபின்புதான் சட்டமன்றம் அதை நிறைவேற்றியது. திட்டமிட்டபடி ரூ.7,530 கோடி வருவாய் கிடைத்ததா? மத்திய அரசு ஒப்புக்கொண்ட மானியத்தை வழங்கியதா? மாநில அரசு எதிர்பார்த்த வருவாயை திரட்டியதா? இல்லை என்றால் ஏன் அந்த இலக்கை ஆட்சியாளர்களால் அடைய முடியவில்லை.

நிதி நிர்வாக பொறுப்பை கவனிக்கும் முதல்–அமைச்சர் அதிகாரிகளை சரியான முறையில் வேலை வாங்கி மத்திய அரசு ஒப்புக்கொண்ட தொகையையும், மாநில அரசு திரட்டக்கூடிய வரி வருவாயையும் ஈட்டி இருக்கவேண்டும். அவ்வாறு செய்திருந்தால் புதுச்சேரி அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பணம் இருந்திருக்கும். சட்டசபையில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்றி இருக்க முடியும். ஆனால் அதிகாரிகளை சரியாக வேலைவாங்கவில்லை.

இதனால் மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு வரவேண்டிய நிதியும் வரவில்லை. புதுச்சேரி அரசே திரட்ட வேண்டிய சொந்த வரி வருவாயையும் திரட்டவில்லை. தன்னுடைய தவறுகளை மறைக்கவே முதல்–அமைச்சர் நாராயணசாமி அடுத்தவர் மீது பழிபோட்டு வருகிறார். இதை கைவிட்டு புதுவை அரசு நிர்வாகத்தில் நிதி வி‌ஷயத்தில் என்ன நடக்கிறது? நிதி நெருக்கடிக்கு எவைகள் காரணம்? 2018–19 பட்ஜெட்டில் குறிப்பிட்ட மத்திய அரசின் மானியம் எவ்வளவு?

மத்திய அரசு வழங்கிய மானியத்தொகை எவ்வளவு? மாநில அரசு சொந்த வருவாயாக திட்டமிட்டது எவ்வளவு? அதில் எவ்வளவு வசூல் ஆனது? குறைவாக வசூல் ஆனதற்கு காரணம் என்ன? ஆகிய விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்