தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது கி.வீரமணி பேட்டி

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என மதுரை அண்ணாநகரில் கி.வீரமணி பேட்டி அளித்தார்.

Update: 2019-02-09 22:45 GMT

மதுரை,

அகில இந்திய பார்வர்டு பிளாக்(சந்தானம் பிரிவு) சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்தானம் உருவப்படம் திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா மதுரை அண்ணாநகரில் நேற்று நடந்தது. பொது செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. சந்தானத்தின் உருவப்படத்தினை திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ., அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:– கடன் சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டும் என்ற நிலையில் மத்திய, மாநில அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் தீர்வு எதுவும் இல்லை. இதில், அத்தியாவசிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது. ஏனென்றால் பா.ஜ.க. கட்சிக்கு காலே கிடையாது. பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவை கூட்டணி வைப்பதை வரவேற்க வேண்டும். ஒரே பட்டனை அழுத்தி அழிக்க வேண்டியவர்களை அழிக்கும் வாய்ப்பு அது. தமிழகத்தில் பா.ஜ.க.வோடு போட்டி என்பது நோட்டாவிற்கு மட்டும் தான். பேராசிரியர் நிர்மலாதேவியை பல மாதங்களாக கைது செய்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்