வத்திராயிருப்பு அருகே ஜல்லிக்கட்டில் துள்ளி ஓடிய காளை கிணற்றில் விழுந்தது தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

வத்திராயிருப்பு அருகே நடந்த ஜல்லிக்கட்டின் போது துள்ளிப்பாய்ந்து ஓடிய காளை 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி அதனை உயிருடன் மீட்டனர்.

Update: 2019-02-09 22:34 GMT

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி நெடுங்குளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டியில் மதுரை, விருதுநகர், தேனி, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 காளைகளும், 150 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் உறுதி மொழி எடுத்த பின்பு களம் இறங்கினர். போட்டியைக்காண ஏராளமானோர் திரண்டு இருந்தனர். வாடிவாசலில் இருந்து காளைகள் வந்ததும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வீரர்களை ஊக்கப்படுத்தினர். இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் மாடு முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அங்கிருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். பாதுகாப்பு பணியில் 250–க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள பொட்டல்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான காளையும் பங்கேற்றது. வடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டதும் இந்த காளை சீறிப்பாய்ந்து ஓடியது. பிடிபடாமல் ஓடிய அந்த காளை நிற்காமல் ஜல்லிக்கட்டு நடந்த இடத்தை தாண்டி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சென்றது. அந்த காளையுடன் வந்தவர்கள் அதனை பிடிக்க பின்தொடர்ந்து ஓடினார்கள்.

யாரிடமும் சிக்காத அந்த காளை இரவக்காடு என்ற இடத்தில் ராமர் என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது. 50 அடி ஆழமுள்ள திறந்த வெளி கிணற்றில் தண்ணீர் இல்லை. அதனை பின்தொடர்து வந்தவர்களால் அதனை மீட்க இயலவில்லை. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் வத்திராயிருப்பு தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையிலான வீரர்கள் இருந்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து நீண்டநேரம் போராடி கயிறு கட்டி காளையை மேலே தூக்கினர். உயிருடன் காளையை மீட்ட தீயணைப்பு வீரர்களை அனைவரும் பாராட்டினர்.

இதேபோல வத்திராயிருப்பை சேர்ந்த ஒருவரது காளை பாய்ந்து ஓடிய போது அந்த பகுதியிலுள்ள குட்டைக்குள் இறங்கியது. அங்கு அதுசேற்றில் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு படையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு காளையை மீட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை மாவட்டம் ஆனையூர் கோசாகுளத்தை சேர்ந்தவரின் காளையும் கலந்து கொண்டது. அந்த காளையோடு அதன் உரிமையாளரும் அவரது உறவினரான வீரமணி (வயது28) என்பவர் உள்பட சிலரும் வந்து இருந்தனர். காளையோடு நின்ற போது வீரமணி திடீரென்று நெஞ்சுவலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். மருத்துவகுழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆம்புலன்ஸ் மூலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் வீரமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இது குறித்து கூமாப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்