ரோந்து பணிக்கு பேட்டரி சைக்கிள் போலீஸ் திட்டம்

ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு பேட்டரியால் இயங்கும் சைக்கிள்கள் வழங்க மும்பை போலீஸ் துறை திட்டமிட்டு உள்ளது..

Update: 2019-02-09 22:17 GMT
மும்பை,

மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், குறுகிய தெருக்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது போலீசாருக்கு சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் மும்பை போலீசாருக்கு ரோந்து பணியில் ஈடுபட பேட்டரியால் இயங்கும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த சைக்கிள்களில் 25 முதல் 30 கி.மீ. வரை தொடர்ந்து பயணம் செய்ய முடியும். சைக்கிள் பேட்டரியை தொடர்ந்து 3 மணி நேரம் பயன்படுத்தலாம். அதன்பிறகு பேட்டரியை ஒரு மணிநேரம் ஜார்ஜ் செய்து பயன்படுத்தலாம். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது சைக்கிளை சாதாரணமாக பெடலை மிதித்து பயன்படுத்தலாம். அவசர நேரங்களில் பேட்டரியை பயன்படுத்தி செல்லலாம். 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்குள் தப்பி ஓடும் குற்றவாளிகளை போலீசார் இந்த சைக்கிள் மூலம் துரத்தி பிடிக்கலாம். இந்த பேட்டரி சைக்கிள் 25 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. பேட்டரியை பயன்படுத்தி பெடலையும் மிதித்தால் அதிக வேகமாக செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சைக்கிள் போலீசாரின் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் என இணை கமிஷனர் தேவன் பாரதி கூறினார்.

மேலும் செய்திகள்