அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொற்றாநோய் பிரிவு செவிலியர்களுக்கு ‘டேப்லெட்’ சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வழங்கினார்
வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள 67 அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களுக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் ‘டேப்லெட்’களை வழங்கினார்.
வேலூர்,
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த பதிவுகள் நவீன முறையில் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் இப்பணியை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள 45 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 14 நகர்புற மருத்துவமனைகள், 7 தாலுகா மருத்துவமனைகள் மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தொற்றா நோய்பிரிவில் பணிபுரியும் 67 செவிலியர்களுக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், மொபைல் வடிவிலான டேப்லெட் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள டேப்லெட்டில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் பெயர், முகவரி, செல்போன் எண்கள், ஆதார் அட்டை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு செல்லும்போது அவர்களின் விபரங்களை அங்குள்ள டேப்லெட்டில் எளிதில் பெற முடியும். நோயாளிகள் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை எடுத்து செல்ல தேவையில்லை. செவிலியர்கள் டேப்லெட்களை கவனமாக கையாள வேண்டும். அதனை அலட்சியமாக பயன்படுத்தக்கூடாது. டேப்லெட்டை பயன்படுத்தும் செவிலியர்களே அதற்கு முழு பொறுப்பாவார்கள்.
விரைவில் திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்துக்கும் டேப்லெட்டுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து டேப்லெட் பதிவேற்றம் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொற்றாநோய் பிரிவு தலைமை டாக்டர் வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.