திருச்செங்கோடு அருகே விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

திருச்செங்கோடு அருகே நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Update: 2019-02-09 22:00 GMT
திருச்செங்கோடு, 

திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் ரோட்டில் மலைசுத்தி பகுதி கிரிவலப்பாதை அருகே அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.

அப்போது மூங்கில் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்றது. இதனால் டிரைவர் பஸ்சை, அந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பினார்.

அப்போது ரோட்டோரம் நடந்து சென்ற மண்டகபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார் (வயது 48) என்பவர் மீது பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும் அந்த பகுதியில் ரோட்டோரம் நடந்து சென்ற சாலப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாவு (70), சுதர்சன் (16), நாமக்கல் பச்சியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெர்சி (16) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் மேல்சிகிச்சைக்காக முதியவர் அப்பாவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்