நாடாளுமன்ற தேர்தலையொட்டி இடமாற்றம் செய்யப்படும் போலீஸ் அதிகாரிகள் பட்டியல் தயாரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இடமாற்றம் செய்யப்பட வேண்டிய போலீஸ் அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் மற்றும் சொந்த தொகுதிகளில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். அதன்படி தலா ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு, 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பொறுத்த வரையில் குலசேகரன் (நாமக்கல்) மற்றும் கைலாசம் (நல்லிபாளையம்) ஆகிய இருவரும் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தலையொட்டி நடைபெற உள்ள இடமாற்றம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
வழக்கமாக போலீஸ் இன்ஸ்பெக்டர்களை வேறு மாவட்டங்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களை ஒரே மாவட்டத்தில் வேறு சட்டசபை தொகுதிகளுக்கும் இடமாற்றம் செய்வோம். ஆனால் இந்த முறை தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில் பார்த்தால் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பணிபுரியும் 60 சப்-இன்ஸ்பெக்டர்களில் 30 பேரை இடமாற்றம் செய்ய வேண்டி உள்ளது. அவ்வாறு செய்தால் தேர்தலை நடத்தும்போது சில சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே சப்-இன்ஸ்பெக்டர்களை ஏற்கனவே உள்ள விதிமுறைகள்படி ஒரே மாவட்டத்திற்குள் தொகுதிவிட்டு தொகுதிக்கு இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்து உள்ளோம். அதற்கான பதில் கிடைத்தவுடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.