‘நாடாளுமன்ற தேர்தலுக்காக பட்ஜெட் மூலம் காதில் பூ சுற்றுகிறார்கள்’ மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலுக்காக பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்து அதன் மூலம் காதில் பூ சுற்றுகிறார்கள் என்று விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வரும் டி.டி.வி. தினகரன் பேசினார்.
கண்டாச்சிமங்கலம்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வந்தார். கடந்த 6-ந்தேதி தொடங்கிய இவரது புரட்சி பயணம் நேற்றுடன் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவடைந்தது. நிறைவு நாளான நேற்று, முதலாவதாக தியாகதுருகத்தில் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைய முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆட்சி செய்வதற்கு காரணமாக இருந்த நமது கழக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், எனக்கும் துரோகம் செய்த காரணத்தால் பிரபு எம்.எல்.ஏ. போன்று தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் தொகுதி மக்களின் தேவைகளை சரிவர செய்யவில்லை.
தமிழக பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளனர். அதை எப்படி நிறைவேற்றுவார்கள். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்ட பணி இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில் ஆறு, ஏரி, குளம் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதே திட்டத்துக்காக கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதி என்ன ஆனது. நாடாளுமன்ற தேர்தலுக்காக நமது காதில் பூ சுற்றுவது போல பல திட்டங்களை அறிவித்து உள்ளனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தால் அவர்களை அடக்குகிறார்கள். ஆனால் இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே அவர்களது சம்பளத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளனர். தற்போது தமிழகத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடி உள்ளது. இதையெல்லாம் சரி செய்யாமல் டாஸ்மாக்கில் இருந்து வருகிற வருமானத்தால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என்று பகல் கனவு காணுகின்றனர். ஜெயலலிதா 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மதுக்கடையை குறைக்காமல் வருமானத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர். சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால் ஆளுங்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.
தியாகதுருகம் பகுதி மக்களின் கோரிக்கையான, தியாகதுருகத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைத்து தரவேண்டும். அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைத்து தரவேண்டும். பாதாள சாக்கடை திட்டம் அமைத்து தர வேண்டும்.
மேலும் கள்ளக்குறிச்சியில் பீத்தாங்கரை ஏரி, ஏமப்பேர் ஏரி, பசுங்காயமங்கலம் ஏரியை தூர்வார வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு எம்.எல்.ஏ. மூலம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கோமுகிமணியன், மாவட்ட அவைத்தலைவர் கே.பி.பாண்டியன், ஒன்றிய செயலாளர் தங்கதுரை, நகர செயலாளர் தம்பி, ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சரவணன், ஒன்றிய பொருளாளர் கதிர்வேல், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர். இதன் பின்னர், கள்ளக்குறிச்சி, மேல்நாரியப்பனூர், சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட தொட்டியம், வடக்கநந்தல், ஆலத்தூர், சங்கராபுரம், பாவலம் ஆகிய பகுதிகளில் பேசிய அவர், பகண்டை கூட்டுரோட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.