விழுப்புரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை: நகை பட்டறையின் பூட்டை உடைத்து 17 பவுன் திருட்டு மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி
விழுப்புரத்தில் நகை பட்டறையின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அந்த பகுதியில் 2 வீடுகளில் அவர்கள் கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 36). இவர் விழுப்புரம் மந்தக்கரை வாணியர் தெரு பகுதியில் நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை பட்டறையை திறக்க வந்தபோது இரும்பு ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பட்டறையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்குள்ள அறையில் வைத்திருந்த 17 பவுன் நகை திருடு போய் இருந்தது.
நள்ளிரவில் மர்ம நபர்கள், பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3½ லட்சமாகும். இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வீரமணி, மருது ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த பட்டறையில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த மோப்ப நாய் தமிழ், திருட்டு நடந்த பட்டறையில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதற்கிடையே, திருட்டு நடந்த நகை பட்டறையின் முன்புற பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அதில் கொள்ளையன் ஒருவனின் உருவம் பதிவாகியுள்ளது. அவன் யார், அதே பகுதியை சேர்ந்தவரா என்றும் அல்லது வெளிமாவட்டத்தை சேர்ந்தவரா? ஏற்கனவே நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அதே பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்ததால் அந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.