காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து 1 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

காதலர் தினத்தை முன்னிட்டு 1 கோடி ரோஜாக்கள் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக அதன் சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.

Update: 2019-02-09 23:15 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, ரோஜா மலர் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். இங்கு ரோஜா உற்பத்திக்கு ஏற்ற வகையில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி, ஆகிய இடங்களில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக பேரிகை பகுதியில், மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. ரோஜா சாகுபடியாளர்கள், பல லட்சம் செலவில், பசுமைக்குடில்கள் அமைத்து ரோஜா மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேரிடையாகவும், மறைமுகமாகவும் விவசாயிகள், ஆண்,பெண் தொழிலாளர்கள், ரோஜா மலர் கொள்முதல் செய்வோர், மலர் வியாபாரிகள் என 2 லட்சம் பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில், தாஜ்மகால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பேர்னியர், கார்வெட், டிராபிக்கல் அமேசான் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனபோதிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில், 50 லட்சம் முதல் 1 கோடி மலர்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டும், குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டுகளில் பலத்த வரவேற்பை பெற்ற தாஜ்மகால் வகை ரோஜா மலருக்கும் மற்றும் ரோடோஸ் வகை ரோஜாவிற்கும் இந்தாண்டு கடும் கிராக்கி ஏற்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட அதிகளவில், அதாவது 2 கோடி மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடும் பனி மற்றும் குளிர்கால நோய்கள் ரோஜா செடிகளை தாக்கியதால், ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்து போனது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனி இந்தாண்டு நிலவியதாகவும், அதன் காரணமாக மலர் உற்பத்தி குறைந்து விட்டதாகவும் ரோஜா மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் 1 கோடி மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும், நல்ல விலை கிடைத்திருப்பதாலும், ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 100 கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி வர்த்தகம் நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, உள்ளூரிலும் ரோஜா மலர் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத், பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு, அதன் மூலம் ரூ. 5 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, உள்ளூர் மார்க்கெட்டில், 20 மலர்கள் அடங்கிய 1 கொத்து நேற்றைய நிலவரப்படி, 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஓசூர் பகுதியில் ரோஜா மலர் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருப்பதால், ஒரு மலரின் விலை 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம், உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் ஈட்ட முடிவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்