சாகரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை

சாகரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2019-02-09 22:00 GMT
சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா குடிகெரே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 12 வயது மகள், அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவள் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த அதேப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான போஜப்பா என்பவர், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி மாணவியை மறைவான பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து போஜப்பா, மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் போஜப்பா, மாணவியை மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன அந்த மாணவி, இந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் அந்த மாணவி திடீரென்று வயிற்று வலியால் பாதிக்கப்பட்டாள். மாணவியை அவளுடைய பெற்றோர் சாகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள், மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றொரிடம் கூறினாள். இதனை கேட்டு அவர்கள் மேலும் அதிர்ந்து போயினர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சாகர் புறநகர் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சாகர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் உத்தரவின்பேரில் சாகர் புறநகர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போஜப்பாவை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்