அருப்புக்கோட்டை அருகே வேன் மீது கார் மோதியது; 10 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
மதுரையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 7 பேர் எட்டையபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை காளியம்மன் கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். இந்த வேன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரும், வேனும் ரோட்டோரமாக பாய்ந்து கவிழ்ந்தது.
இதனால் வேன், காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மாரிமுத்து, குமார், பால்பாண்டி, முத்தையா, ஈஸ்வரன், கட்டமுத்து, முருகையா மற்றும் காரில் வந்த கோவையை சேர்ந்த உதயகுமார் (வயது 19), வளர்மதி(42), லதாமகேஸ்வரி ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 7 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.