கொடைக்கானலில் தூக்கில் பிணமாக தொங்கிய கேரள பெண் - உறவினர்கள் சாலை மறியல்

கொடைக்கானலில் கேரளாவை சேர்ந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-08 23:30 GMT
கொடைக்கானல், 

கொடைக்கானல் எம்.எம்.தெருவில் வசிப்பவர் சாஜ். அவருடைய மனைவி ரோகிணி (வயது 38). இவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலம் கண்ணூர் ஆகும். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் ரோகிணி பிணமாக தொங்கினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரோகிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவருடைய கணவர் சாஜ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயசீலன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து எனது மனைவி ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்திருந்தார். வேலை நிமித்தமாக நான் கேரளா சென்ற நிலையில் திடீரென எனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ரோகிணி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்களும், பொதுமக்களும் கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் உடலை வாங்கினர். பின்னர் ரோகிணியின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது தற்கொலைக்கு காரணமாக இருந்தவரை கைது செய்யக்கோரி கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், மூஞ்சிக்கல் உள்ளிட்ட 3 இடங்களில் உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை (இன்று) பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்திடுவோம் என்று போலீசார் உறுதி அளித்தன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். அதன்பின்பு ரோகிணியின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். 

மேலும் செய்திகள்