சப்-இன்ஸ்பெக்டர் மீது பொதுமக்கள் புகார்: திருச்சி போலீஸ் கமிஷனர் வாக்கி-டாக்கி மூலம் அதிரடி நடவடிக்கை
திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்ததற்கு திருச்சி போலீஸ் கமிஷனர் வாக்கி-டாக்கி மூலம் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். ஒரு வழக்கு தொடர்பாக பாலக்கரை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக புகார் தெரிவிக்க வந்திருந்தனர். இதில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் கமிஷனர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.
இதையடுத்து செங்குளம் காலனியை சேர்ந்த இலக்கியதாசன்(வயது23) குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில், இலக்கியதாசனை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் தாக்கியதாவும், இதில் காயமடைந்த இலக்கியதாசன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையில் பாலக்கரை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், இந்த சம்பவத்தில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், இலக்கியதாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக அவர் மிரட்டுவதாகவும், தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்ற கமிஷனர் அமல்ராஜ், தனது அறையில் இருந்தவாறு வாக்கி-டாக்கி மூலம் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அறையில், புகார் தெரிவித்தவர்களை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பாலக்கரை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாசை வாக்கி-டாக்கியில் அழைத்து பேசினார். அப்போது புகார் பற்றி கேள்வி கேட்டார்.
கமிஷனருக்கு உரிய மரியாதையில் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்கையில், “இரு தரப்பினரிடையே நடந்த மோதல் சம்பவம். இது தொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். இலக்கியதாசனுக்கு உடலில் காயங்கள் இருப்பதாக புகார்தாரர்கள் கூறுவதால், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்பவும், மேலும் உரிய விசாரணை நடத்தவும், இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புகார்தாரர்களிடம், கமிஷனர் உறுதி அளித்தார். கமிஷனர் உத்தரவு பிறப்பித்தபோது மற்ற போலீசார், வாக்கி-டாக்கியில் உரையாடலை உன்னிப்பாக கேட்டனர்.