பா.ம.க. பிரமுகர் கொலையில் மேலும் சிலருக்கு போலீசார் வலைவீச்சு
திருவிடைமருதூர் அருகே நடந்த பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மேலேதூண்டிவிநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 42). பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான இவர் கடந்த 5-ந் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன்(தஞ்சை), சீனிவாசன்(அரியலூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான், முகமதுரியாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொலை நடந்தபோது வந்த வாகனங்கள் மற்றும் கொலையாளிகள் குறித்து அறிய வசதியாக திருபுவனம் கடைவீதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் கொலையாளிகள் வந்த வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் திருபுவனம், திருவிடைமருதூர், கும்பகோணம் எல்லைப்பகுதியில் கொலையாளிகள் பயன்படுத்திய வாகனம் செல்கிறதா? என கண்காணிக்க வசதியாக ஆங்காங்கே போலீஸ் வாகனத்தில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்றது. ராமலிங்கம் கொலை தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படாமல் தவிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.