குமாரசாமி வெளியிட்டது, போலி ஆடியோ குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் எடியூரப்பா ஆவேசம்

அரசின் தோல்வியை மறைக்க குமாரசாமி போலி பேர ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார் என்றும், என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என எடியூரப்பா ஆவேசத்துடன் தெரிவித்தார்.

Update: 2019-02-08 22:30 GMT
பெங்களூரு,

ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா பேரம் பேசியதாக குற்றம்சாட்டிய முதல்-மந்திரி குமாரசாமி அதுதொடர்பாக ஆடியோ ஒன்றையும் நேற்று வெளியிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எடியூரப்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய தாவது:-

நான் கடந்த வெள்ளிக்கிழமை தேவதூர்க்காவில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தேன். ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. நாயனகவுடா உள்பட யாரையும் நான் சந்தித்து பேசவில்லை. இது சத்தியம். இதுதான் உண்மை. குமாரசாமி தனது தோல்வியை மறைக்கவும், காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசின் இயலாமையை மறைக்கவும் இந்த கட்டுக் கதையை கூறியிருக்கிறார்.

குமாரசாமி வெளியிட்ட ஆடியோ போலியானது. நான் யாரையும் சந்திக்கவில்லை. குமாரசாமி தனது அரசின் தோல்விகளை மறைக்கவே இதுபோல் போலி பேர ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார்.

இந்த கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. உடனே பதவி விலக வேண்டும். குமாரசாமி ஒரு திரைப்பட தயாரிப்பாளர். அவர் தனது குரலை பதிவு செய்வதில் கைதேர்ந்தவர். அவர் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது.

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். மேலும் சபாநாயகரிடம் ரூ.50 கோடி தருவதாக கூறியதை உரிய ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு முழுக்குபோட தயார். இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

மேலும் செய்திகள்