20 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பேச்சு
வேலூர் மாவட்டத்தில் 20 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பேசினார்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரிமலை, கந்திலி, குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையம் சார்பில், 30–வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், போக்குவரத்து ஆய்வாளர் ஜான்கமலேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வரவேற்றார்.
விழாவில் வேன், கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினிலாரி டிரைவர்கள், பள்ளி மாணவர்கள் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 150 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பேசியதாவது:–
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 20 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது. இதற்கு காரணம், சம்பந்தப்பட்ட போலீஸ், போக்குவரத்து துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது தான். இருப்பினும் அடுத்த ஆண்டு விபத்துகளின் சதவீதத்தை இன்னும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை விதிகளை தனிநபர் கடைபிடித்து விழிப்புணர்வுடன் பயணிக்க வேண்டும். அதிக வேகம் தவிர்க்க வேண்டும். நமது உயிர் முக்கியம். வாழ்க்கை நமக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்காது. மேலும் ஆட்டோ, வேன், பஸ் டிரைவர்கள் அதிக அளவில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல கூடாது. குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.