2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிப்படி அடுத்தகட்டமாக எத்தனை மதுக்கடைகள் மூடப்படும்?

2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் அடுத்தகட்டமாக எத்தனை மதுக்கடைகள் மூடப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதுடன், அதற்கு தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை வக்கீல் சங்க செயலாளர் செல்வராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

Update: 2019-02-07 22:30 GMT
மதுரை, 

மணப்பாறையில் உள்ள முன்சிப் கோர்ட்டு முன்பு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள இந்த கடை, விதிகளை மீறி அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள், வக்கீல்கள், பணியாளர்கள் என அனைவரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திருச்சி கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மணப்பாறை முன்சிப் கோர்ட்டு முன்புள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வக்கீல், “மணப்பாறை கோர்ட்டு முன்புள்ள டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. அந்த கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது“ என்று தெரிவித்தார்.

பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல் கணபதிசுப்பிரமணியம், “தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளுடன் செயல்படும் பார்கள் விதிகளை மீறி செயல்படுகின்றன. அனைத்து பார்களும் 4 பக்க சுவர்களுடன் உள்ள கான்கிரீட் கட்டிடத்தில் தான் இயங்க வேண்டும் என்பது விதி. ஆனால் பிளாஸ்டிக் மற்றும் தகரங்களால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தான் ஏராளமான பார்கள் செயல்படுகின்றன” என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், “பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் அதிகம் பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாக தெரிகிறது. இதை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாக இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் தமிழக அரசுக்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் வருமாறு:-

தமிழகத்தில் மொத்தம் எத்தனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளன? போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் எத்தனை? டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா? எத்தனை டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் தீயணைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன?

டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு உரிமம் கேட்டு எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர்? உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் என்னென்ன?

பார்களில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பரிசோதனை செய்யப்படுகிறதா? பார்களில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் குறித்த ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடுகிறார்களா?

2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில், தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன? அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் மாதம் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்