அமைச்சரின் பினாமி என்று கூறி பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

குலசேகரம் அருகே அமைச்சரின் பினாமி என்று கூறி பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி செய்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-07 22:30 GMT
குலசேகரம்,

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 55). குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மகேஷ்(50). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

இவர்கள் குலசேகரம் அருகே பொன்மனை, ஈஞ்சக்கோடு, தடிக்காரன்கோணம் ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அங்கு பொதுமக்களிடம், சுப்பிரமணியன் தன்னை பாளையங்கோட்டை சிறையில் போலீசாக பணியாற்றி வருவதாகவும், தமிழக அமைச்சர் ஒருவரின் பினாமியாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், இருவரும் குறைந்த வட்டிக்கு அதாவது ஒரு பைசா வட்டிக்கு எத்தனை லட்சம் பணம் வேண்டுமானாலும் வாங்கித்தருவதாக கூறினர். அதற்கு தங்களுக்கு முன்பணமாக ஒருவருக்கு ரூ.10 ஆயிரம்தர வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.

இதைநம்பி பொன்மனையை சேர்ந்த விஜயன், சுந்தரன், சுரேஷ், பிரதீஷ், ராஜேந்திரன், அவருடைய மனைவி சுதா உள்பட ஏராளமானோர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் பல லட்சம் ரூபாயை கொடுத்தனர். பின்னர் இருவரும் 10 நாட்களில் பணம் வாங்கி தருவதாக கூறி சென்றனர். ஆனால், 3 மாதமாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று மாலை சுப்பிரமணியனும், மகேசும் பொன்மனைக்கு வந்தனர். இதையறிந்த விஜயன் உள்பட சிலர் அவர்களை மடக்கி பிடித்து பணத்தை தரும்படி கேட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சந்தேகமடைந்த பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து குலசேகரம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக புகார் மனுவும் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் அவர்கள் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பொன்மனை, தடிக்காரன்கோணம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்