பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; நாளை மறுநாள் நடக்கிறது

கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.40 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது.

Update: 2019-02-07 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூரில் புகழ்பெற்ற பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி, விநாயகர், பூங்காயி அம்மன் மற்றும் பரிவாரதெய்வங்கள் தனித்தனியே சன்னதி கொண்டுள்ளன. இக்கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.40 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை விக்னேஸ்வரபூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்காதேவி மற்றும் நவக்கிரக ஹோமங்கள், கோபூஜை ஆகியவை நடந்தன. மாலை விநாயகர் வழிபாடு, மகா வாஸ்துசாந்தி, ரக்ஷோக்ன ஹோமம் மற்றும் சக்திஅழைத்தல் ஆகியவை நடைபெற்றன. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு புனித மண் எடுத்துக்கொண்டு ஊர்வலம் வருதல், மாலை 4.35 மணிக்கு மேல் வருணபூஜை, அங்குரார்ப்பணம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 2-வது கால யாகசாலை பூஜைகளும், 96 வகையான மூலிகைகளை கொண்டு திரவிய யாகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கணபதிபூஜை, வருண ஆராதனை, பஞ்சகவ்ய சிவ பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் 3-வது கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாகசாலைபூஜைகள், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம் நடக்கிறது.

காலை 8.40 மணிக்கு பச்சையம்மன் சமேத மன்னாதசுவாமி கோவில் ராஜகோபுரத்திற்கும் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் பச்சையம்மன் சமேத மன்னாதசுவாமி மூலவர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளை வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் ஜெயச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் கல்யாணி, அரியலூர் உதவி ஆணையர் முருகையா, கோவில் தக்கார் சன்னாசி, குலதெய்வ வழிபாட்டுத்தாரர்கள், கீழப்புலியூர், கே.புதூர் கிராம மக்கள், கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்