அரியலூர், பெரம்பலூரில் மனு தர்ம சாசன நகலை எரிக்கும் போராட்டம் திராவிடர் கழகத்தினர் 50 பேர் கைது

அரியலூர்- பெரம்பலூரில் மனு தர்ம சாசன நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-07 23:00 GMT
அரியலூர்,

திராவிடர் கழகம் சார்பில் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனு தர்ம சாசன நகலை எரிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

அதன்படி அரியலூர் அண்ணாசிலை அருகே நடந்த போராட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ் மற்றும் டாக்டர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மனு தர்ம சாசன நகலை தீயிட்டு கொளுத்தினர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் நடந்த மனு தர்ம சாசன நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்