நவசேவா துறைமுகத்தில், வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட ரூ.17 கோடி சிகரெட் பண்டல்கள் பறிமுதல் 2 பேர் கைது
நவசேவா துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி சிகரெட் பண்டல்களை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர்கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு சட்டவிரோதமாக சிகரெட் பண்டல்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் நவிமும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் உள்ள குடோனில் இருந்த கண்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் துபாயில் இருந்து வந்த 40 அடி உயரமுள்ள கண்டெய்னரில் வாஷ் பேசின் அடங்கிய பார்சல் இருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். இதில் வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கிருந்த 650 பார்சல்களில் இருந்த ரூ.17 கோடி மதிப்புள்ள சிகரெட் பண்டல்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கண்டெய்னரை அவுரங்காபாத்திற்கு கடத்தி செல்ல இருந்த ராஜூவ்குமார், ரஞ்சன் குமார் ஆகிய 2 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.