கோவையில் துணிகரம், பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி 5¾ கிலோ தங்க நகைகள் கொள்ளை
கோவையில் பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி, மிளகாய் பொடி தூவி 5¾ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவையில் உள்ள சில தங்க நகைக்கடைக்காரர்கள் நகைகளை தயார் செய்து பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களுக்கு விமானத்தில் அனுப்பி வைப்பது வழக்கம். இதற்கென்று தனியார் பார்சல் நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் தங்க நகை தயாரிப்பாளர்களிடம் நகைகளை பெற்று விமானங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கின்றன.
அதன்படி கோவையில் உள்ள 15 தங்க நகை தயாரிப்பாளர்கள் 5¾ கிலோ தங்க நகைகளை மும்பைக்கு விமானத்தில் அனுப்ப திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் கோவை மில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தை அணுகி தங்க நகைகளை கொடுத்தனர்.
அதன்பேரில் 5¾ கிலோ தங்க நகைகளை பேக்கிங் செய்து பார்சல் நிறுவன ஊழியர் பிருத்திவி சிங்(வயது 26) என்பவர் மோட்டார் சைக்கிளில் விமான நிலையத்துக்கு எடுத்துச்சென்றார். அவர் அவினாசி சாலையில் பீளமேடு சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று பின்னால் வந்து மோதியது. இதில் பிருத்திவி சிங் கீழே விழுந்தார். மோதிய மோட்டார் சைக்கிளில் 3 பேர் இருந்தனர். அவர்களில் 2 பேர் ஹெல்மெட் அணிந்திருந்தனர். கீழே விழுந்த பிருத்திவி சிங் எழுந்து தான் கொண்டு வந்த தங்க நகை பார்சலை எடுக்க முயன்றார்.
உடனே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களும் பிருத்திவி சிங் மீது மிளகாய் பொடி தூவியதுடன், அவரை சரமாறியாக தாக்கினார்கள். இதில் பிருத்திவி சிங் காயம் அடைந்து நிலைகுலைந்து விழுந்தார். உடனே 3 வாலிபர்களும் பிருத்திவி சிங் கொண்டு வந்த பார்சலை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடம் மற்றும் அங்கிருந்த குப்பை தொட்டியில் குற்றப்பிரிவு போலீசார் கொள்ளையர்களின் தடயங்கள் ஏதாவது கிடைக்குமா? என்று தேடினார்கள்.
சம்பவ இடத்தில் ஒரு கத்தி மற்றும் ஒரு ஜோடி காலணிகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். கொள்ளை போன 5¾ கிலோ தங்க நகைகளின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் இருந்து 100 அடி தூரத்தில் தான் நடந்துள்ளது. எனவே போலீஸ் நிலையம் அருகிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.