மனுநீதிநூல் நகல் எரிப்பு போராட்டம்: தஞ்சையில் திராவிடர் கழகத்தினர் 66 பேர் கைது

மனுநீதிநூல் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-07 23:00 GMT
தஞ்சாவூர்,


பெண்களை இழிவுபடுத்தும் மனுநீதி நூல் நகலை எரித்து போராட்டம் நடத்தப்போவதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை திராவிடர் கழக மாவட்டம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது.

போராட்டத்திற்கு கும்பகோணம் தி.க. மாவட்ட மகளிரணி தலைவி ஜெயமணிக்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லிராணி, தேவி, மகளிரணி தலைவி செல்வமணி, செயலாளர்கள் கலைச்செல்வி, மகளிர் பாசறை தலைவி மல்லிகா, செயலாளர் அஞ்சுகம், அமைப்பாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பிய போது பின்பகுதியில் இருந்து மனுநீதி நகலை எரித்தனர். இதனைப்பார்த்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

போராட்டத்தில் தி..க. பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மண்டல தலைவர் ஜெயராமன், செயலாளர் அய்யனார், மாவட்ட தலைவர்கள் அமர்சிங், சித்தார்த்தன், கவுதமன், மாவட்ட செயலாளர்கள் அருணகிரி, வீரையன், துரைராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 66 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகல் எரிப்பு போராட்டத்தையொட்டி தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், விஜயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்