கிருஷ்ணகிரியில் மனுதர்மம் நகல் எரிப்பு போராட்டம் திராவிடர் கழகத்தினர் 26 பேர் கைது
கிருஷ்ணகிரியில் மனுதர்மம் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
சாதியை பாதுகாக்கும், பெண் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக கூறி, இந்துக்களின் திருமண சடங்குகளை விளக்கும் வகையிலான மனு தர்மம் என்ற புத்தக நகலை எரிக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர் பகுதி திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி இந்த புத்தக நகல் எரிப்பு போராட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் மதிமணியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மாணிக்கம், ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன், மாவட்ட செயலாளர் செல்வம், தர்மபுரி மண்டல செயலாளர் திராவிட மணி, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் குமார், திருப்பத்தூர் மாவட்ட இணை செயலாளர் ரவி, பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், துக்காராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், கர்நாடக மாநில தலைவர் ஜானகிராமன், கர்நாடக மாநில துணைத்தலைவர் வேலு ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். போராட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் கதிரவன், இளைஞரணி தலைவர் ஆறுமுகம், ராஜா, தங்கராஜன், ஓசூர் மாவட்ட அமைப்பாளர் முனுசாமி, மாவட்ட மகளிர் அணி தலைவி செல்வி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கண்மணி, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ், நகர தலைவர் வேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டு மனுதர்ம புத்தக நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.