வையம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

வையம்பட்டி அருகே அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-06 22:15 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சி வெள்ளப்பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது வீட்டின் அருகே மகாலட்சுமி, தங்கவேல் ஆகியோரின் வீடுகளும் உள்ளன. நேற்று முன்தினம் காலை அனைவரும் வேலை விஷயமாக வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர்.

பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது 3 வீடுகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பணம் மற்றும் நகைகள் திருட்டு போய் இருந்தது. ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கலைச்செல்வி வீட்டில் 3 பவுன் சங்கிலி மற்றும் ஒரு டி.வி.யும், தங்கவேல் வீட்டில் ஒரு பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரமும், மகாலட்சுமி வீட்டில் ரூ.4 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது. அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்