பழைய கட்டளை மேட்டு வாய்க்காலை தூர்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

பழைய கட்டளை மேட்டு வாய்க்காலை தூர்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-02-06 22:45 GMT
திருச்சி,

காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலும் ஒன்று. காவிரியில் மாயனூரில் இருந்து பிரிந்து கரூர், திருச்சி மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி அளித்து வரும் இந்த வாய்க்கால் 1934-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டதாகும்.

இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் ஊர்களில் நச்சலூர், கவுண்டம்பட்டி, நெய்தலூர், சேப்ளா பட்டி, முதலைப்பட்டி, சூரியனூர், எட்டரை கோப்பு, புலியூர், அதவத்தூர், தாயனூர், பள்ளக்காடு, சோமரசம் பேட்டை, அல்லித்துறை ஆகிய கிராமங்கள் கடை மடை பகுதிகளாகும்.

இந்த கடைமடை பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். கட்டளை கால்வாயின் தலைப்பு பகுதியில் உள்ள அளவிற்கு கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவது இல்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கடைமடை பகுதியில் பாசனம் சரியாக நடைபெறவில்லை. இந்த ஆண்டும் அதே நிலை தான். இதனால் கட்டளை மேட்டு வாய்க்கால் தண்ணீர் இன்றி வறண்டு போய் காட்சி அளிக்கிறது.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் முறையாக வந்து சேராததற்கு காரணம் வாய்க்காலின் பல இடங்களில் முள் செடிகள், மரங்கள் முளைத்து இருப்பதால் அவை நீர் போக்கிற்கு தடையாக உள்ளன. எனவே வாய்க்காலில் உள்ள அனைத்து மதகுகளையும் சீரமைத்து, தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். வாய்க்காலை தூர்வாரினால் தான் தலைப்பு பகுதியில் திறக்கப்படும் 411 கன அடி தண்ணீர் கடைமடை பகுதி வரை வந்து சேரும்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பழைய கட்டளை மேட்டு வாய்க்காலை ரூ.3 கோடியில் தூர்வாருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு திட்டம் தயாரித்தனர். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு இதுவரை அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த ஆண்டும் தூர்வாரப்படவில்லை என்றால் சுமார் ரூ.30 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறி வருகிறார்கள். எனவே நாளை (8-ந்தேதி) தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படுமா? என்பது திருச்சி மற்றும் கரூர் பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகும். 

மேலும் செய்திகள்