திருச்சி விமான நிலையத்தின் வான் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க மேலும் 6 கேமராக்கள்

திருச்சி விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க மேலும் 6 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விமான கடத்தலை தடுப்பதற்காக அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.

Update: 2019-02-06 23:00 GMT
செம்பட்டு,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு இருமுறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் விமான கடத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி நடக்க வேண்டியது ஒத்திவைக்கப்பட்டு நேற்று காலை விமான நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் துணை கமிஷனர் நிஷா, விமான நிலைய இயக்குனர் குணசேகரன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், டெல்லியில் இருந்து வந்த ராணுவ அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விமான கடத்தல் சம்பவங்கள் நடை பெறாமல் தடுப்பது எப்படி, கடத்தல் சம்பவம் நடந்து விட்டால் அசம்பாவிதம் ஏற்படாமல் விமானத்தை மீட்பது எப்படி? என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதி, விமானங்கள் புறப்படுவதற்கு முன்பாகவும், தரை இறங்கிய பின்னரும் நிறுத்தி வைக்கப்படும் இடமான ‘ஏப்ரன்’ பகுதி ஆகிய இடங்களில் மேலும் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணித்து விமான கடத்தலை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும். இந்த கேமராக்களை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இயக்கி வைத்தார்.

விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதி, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாகனங்கள் உள்ளே வரும் வாசல் மற்றும் வெளியே செல்வதற்கான பாதை, திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்