கொடைரோடு அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய 6 பேர் கைது
கொடைரோடு அருகே 4½ லட்சம் மதிப்புள்ள 3 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைரோடு,
மதுரையை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி. அவருடைய மனைவி லதாபூரணம் (வயது 48). இவர், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியில் முதல்வராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி தொழிற்பேட்டை அருகே உள்ளது.
சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உள்ள 3 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். மேலும் அங்கு வைத்திருந்த மின்வயர்கள், 3 ரோல் தடுப்பு வேலி கம்பிகள் ஆகியவற்றையும் திருடி சென்றனர். இது குறித்து லதாபூரணம் அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரபீக், நாராயணன் மற்றும் போலீசார் பள்ளப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தேனி மாவட்டம் வருசநாடு சிங்கராஜபுரத்தை சேர்ந்த சின்னச்சாமி (வயது 38), ஆசைத் தம்பி (38), சின்னன் (45), ஆண்டிக்காளை (32), பரமன் (37), நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு ஊராட்சி கன்னிமார் நகரை சேர்ந்த பாண்டி (42) ஆகியோர் என்பதும், லதாபூரணம் தோட்டத்தில் இருந்த சந்தன மரங்கள், தடுப்பு வேலி கம்பிகளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து சின்னச்சாமி உள்பட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் யாரிடம் சந்தன மரத்தை வெட்டி விற்பனை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரங்களின் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.