வேலூரில் நடந்த விபத்தில் கால்களை இழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
வேலூரில் நடந்த விபத்தில் 2 கால்களையும் இழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவின்பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
வேலூர்,
வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் அம்ஜித் (வயது 50), தொழிலாளி. இவர் கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23–ந் தேதி மோட்டார் சைக்கிளில் வேலூர் பஜாருக்கு வந்து கொண்டிருந்தார். முள்ளிப்பாளையம் அருகே வந்தபோது வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற அரசு பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அம்ஜித்தின் 2 கால்களும் முறிந்தன. படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தில் கால்களை இழந்த அம்ஜித் இழப்பீடு வழங்கக்கோரி வேலூர் கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி வெற்றிசெல்வி கடந்த 2017–ம் ஆண்டு விபத்து இழப்பீடாக ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்தை அம்ஜித்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் விபத்து இழப்பீட்டை அரசு போக்குவரத்துக்கழகம் வழங்கவில்லை.
இதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி வெற்றிசெல்வி உத்தரவிட்டார். அதன்பின்னரும் 4 மாதம் விபத்து இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் வழங்கவில்லை. நேற்று முன்தினம் வரை அம்ஜித்துக்கு விபத்து இழப்பீடு மற்றும் வட்டி என ரூ.7 லட்சத்து 13 ஆயிரம் அரசு போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டியிருந்தது.
விபத்து இழப்பீட்டை வழங்காததால் நேற்று வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த குடியாத்தம் செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். தொடர்ந்து அந்த பஸ் வேலூர் கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.