கேலி செய்தவர்கள், அக்காள் கணவர், நண்பர் என 5 பேரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபர்
கேலி செய்தவர்கள், அக்காள் கணவர், நண்பர் என 5 பேரை வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
மும்பை மாகிம் போலீசார் கடந்த மாதம் பாந்திரா பைப்லைன் பகுதியில் இருந்து ஆண் உடல் ஒன்றை மீட்டனர். விசாரணையில் அவர் தொழிலாளி சூரஜ் என்பது தெரியவந்தது. மேலும் சூரஜ் கடைசியாக அவருடன் வேலை பார்த்து வந்த மற்றொரு தொழிலாளியான விட்டல்(வயது26) என்பவருடன் இருந்து உள்ளார்.
இதையடுத்து மாகிம் போலீசார் கொலை குறித்து விசாரிப்பதற்காக விட்டலை தேடினர். இதில், அவர் சொந்த ஊரான கர்நாடக மாநிலம், குல்பர்காவில் உள்ள அப்சல்பூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விட்டலை கைது செய்தனர். பின்னர் அவரை மும்பைக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
விட்டல் மும்பையில் தொழிலாளியாக வேலை பார்த்து உள்ளார். சம்பவத்தன்று அவருடன் வேலை பார்த்த ஜமுரா என்பவர் விட்டலை கேலி செய்து உள்ளார். இந்தநிலையில் 2017-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி விட்டல் அவரது நண்பர் சூரஜ் மற்றும் ஜமுரா ஆகிய 3 பேரும் ஒன்றாக மதுகுடித்து உள்ளனர். அப்போது போதை தலைக்கு ஏறியதும் விட்டலுக்கு, ஜமுரா தன்னை கேலி செய்தது நினைவுக்கு வந்தது. பின்னர் அவருக்கு வெறி பிடித்தது போல ஆனது. இதனால் அவர் ஜமுராவை கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தார்.
ஜமுராவின் உடல் மாகிம் காஸ்வே பகுதியில் போலீசாரால் மீட்கப்பட்டு இருந்தது. இதுநடந்த ஒரு மாதத்தில் விட்டல் தன்னை கேலி செய்த பெங்காலி என்பவரையும் கல்லால் தாக்கி கொலை செய்து உள்ளார். அவரது உடல் பாந்திரா மாகிம் கழிமுகப்பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பெங்காலியை அதே ஆண்டு நவம்பர் 7-ந் தேதி கொலை செய்ததாக விட்டல் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இந்த 2 கொலைக்கு பிறகு தான் விட்டல் சொந்த ஊருக்கு சென்று உள்ளார். அங்கு டிசம்பர் 6-ந் தேதி தனது அக்காளுடன் அவரது கணவர் சண்டைபோட்டதால் அவரையும் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் விட்டலை கைது செய்தனர்.
இந்தநிலையில் அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு கடந்த டிசம்பரில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பிறகு அவர் மீண்டும் மும்பை வந்துள்ளார். ஆனால் அங்கு தனது முதல் 2 கொலைகள் பற்றி அறிந்த நண்பர் சூரஜ் போலீசாரிடமோ அல்லது வேறு யாரிடமாவது தன்னை காட்டி கொடுத்துவிடுவார் என விட்டல் பயந்தார். எனவே அவர் சூரஜையும் கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி கடந்த மாதம் 4-ந் தேதி மதுகுடிப்பதற்காக பாந்திரா பைப்லைன் பகுதிக்கு அழைத்து சென்று கல்லால் தாக்கி சூரஜையும் கொலை செய்து உள்ளார்.
இந்த 4 கொலைகள் தவிர மேலும் ஒருவரை கொலை செய்து இருப்பதாக விட்டல் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார். ஆனால் அந்த சம்பவத்தில் உடல் ஏதும் மீட்கப்படாததால் அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் ஒருவர் சாதாரண விஷயங்களுக்காக 5 பேரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.